திவ்ய நற்கருணை ஆசீர்

ஆராதனை:

விண்ணில் வாழும் எம் தந்தாய்
உம்மை ஆராதிக்கின்றோம்
எம்மை ஏற்றுக் கொள்ளுமே
உம்மை அன்பு செய்கின்றோம் (2)

எம்மை மீட்ட இயேசுவே
உம்மை ஆராதிக்கின்றோம்
எம்மை ஏற்றுக் கொள்ளுமே
உம்மை அன்பு செய்கின்றோம் (2)

இறைவனின் ஆவியே
உம்மை ஆராதிக்கின்றோம்
எம்மை ஏற்றுக் கொள்ளுமே
உம்மை அன்பு செய்கின்றோம் (2)

எழுந்தேற்றப் பாடல்

அன்பின் தேவ நற்கருணையிலே
அழியாப் புகழோடு வாழ்பவரே
அன்புப் பாதையில் வழி நடந்தே
அடியோர் வாழ்ந்திடத் துணைசெய்வீர்

1. அற்புதமாக எமைப் படைத்தீர்
தற்பரன் நீரே எமை மீட்டீர்
பொற்புடன் அப்ப ரசகுணத்தில்
எப்பொழுதும் வாழ் இறைவன் ஆனீர்
எத்தனை வழிகளில் உமதன்பை
எண்பித்தெமை நீர் ஆட்கொண்டீர்

2. கல்வாரி மலையின் சிகரமதில்
கனிவுடன் தினம் எமை நிலைநிறுத்தும்
நற்கருணை விசுவாசமதில்
நம்பிக்கையூட்டி வளர்த்திடுவீர்
இளமையின் பொலிவால் திருச்சபையும்
யாவரும் வாழத் தயை புரிவீர்

என்தேவனே

என் தேவனே என் தேவனே
நான் உம்மை விசுவசிக்கிறேன்
நான் உம்மை ஆராதிக்கிறேன்
நான் உம்மை நம்புகிறேன்
நான் உம்மை சிநேகிக்கிறேன்

உம்மை விசுவசியாதவர்க்காகவும்
உம்மை ஆராதிக்காதவர்க்காகவும்
உம்மை நம்பாதவர்க்காகவும்
உம்மை சிநேகிக்காதவர்க்காகவும்
உமது மன்னிப்பைக் கேட்கிறேன்

மாண்புயர்

மாண்புயர் இவ்வருள் அனுமானத்தை
தாழ்ந்து பணிந்து ஆராதிப்போம்
பழைய நியம முறைகள் அனைத்தும்
இனி மறைந்து முடிவு பெறுக
புதிய நியம முறைகள் வருக
புலன்களாலே மனிதன் இதனை
அறிய இயலாக் குறைகள் நீக்க
விசுவாசத்தின் உதவி பெறுக

பிதா அவர்க்கும் சுதன் இவர்க்கும்
புகழ்ச்சியோடு வெற்றியார்ப்பும்
மீட்பின் பெருமை மகிமையோடு
வலிமை வாழ்த்து யாவும் ஆக
இருவரிடமாய் வருகின்றவராம்
புனித ஆவியானவர்க்கும்
அளவில்லாத சம புகழ்ச்சி
என்றுமே உண்டாகுக -ஆமென்.

குரு: வானின்று இறங்கிவந்த அப்பமிதுவே!
அனைவரும்: இனிமை யாவும் தன்னகத்தே கொண்ட அப்பமதுவே

ஜெபிப்போமாக:
இறைவா இந்த வியப்புக்குறிய திருவருட்சாதனத்திலே, உம்முடைய திருப்பாடுகளின் நினைவை எங்களுக்கு விட்டுச்சென்றீர். உமது திருவுடல், திருஇரத்தம் ஆகிய இவற்றின் மறைபொருளைக் வணங்கும் நாங்கள், உம் மீட்பின் பலனை இடைவிடாமல் கண்டு அனுபவிக்க அருள் புரியும். என்றென்றும் வாழ்ந்து ஆட்சிசெய்யும் எங்கள் ஆண்டவரும் உம் திருமகனுமாகிய இயேசு கிறிஸ்து வழியாக உம்மை மன்றாடுகிறோம் -ஆமென்

தேவ துதிகள்

சர்வேசுரன் -துதிக்கப்படுவாராக !
அவருடைய பரிசுத்த நாமம் -துதிக்கப்படுவதாக !
மெய்யான தேவனும் மெய்யான மனிதனுமான இயேசுகிறிஸ்து நாதர் -துதிக்கப்படுவாராக
இயேசுவின் திரு நாமம் -துதிக்கப்படுவதாக !
அவருடைய மிகவும் பரிசுத்த இருதயம் -துதிக்கப்படுவதாக !
அவருடைய விலைமதியாத திரு இரத்தம் -துதிக்கப்படுவதாக !
பீடத்தின் மிகவும் பரிசுத்த தேவதிரவிய அனுமானத்தில் இயேசுநாதர் -துதிக்கப்படுவாராக !
தேற்றுகிறவராகிய பரிசுத்த ஆவி -துதிக்கப்படுவாராக !
சர்வேசுரனுடைய தாயாகிய அதிபரிசுத்த மரியம்மாள் -துதிக்கப்படுவாளாக !
அவருடைய பரிசுத்த மாசில்லாத உற்பவம் -துதிக்கப்படுவதாக !
அவளுடைய மகிமை நிறை ஆரோபணம் -துதிக்கப்படுவதாக !
கன்னிகையும் தாயுமான மரியம்மாளின் நாமம் -துதிக்கப்படுவதாக !
அவளுடைய பரிசுத்த பர்த்தாவாகிய புனித சூசையப்பர் -துதிக்கப்படுவாராக !
தம்முடைய சம்மனசுக்களிடத்திலும் புனிதர்களிடத்திலும் சர்வேசுரன் -துதிக்கப்படுவாராக !

மாதாவே துணை:

மாதாவே துணை நீரே உம்மை
வாழ்த்திப் போற்றவரம் தாரும்
இதோ பிள்ளைகள் வந்தோம் அம்மா
ஏற்றன்பாக எனைப்பாரும்

1. வானோர் தம் அரசே தாயே – எம்
மன்றாட்டைத் தயவாய் கேளும்
ஈனோர் என்றெம்மை நீர் தள்ளாமல்
எக்காலத்துமே தற்காரும்

2. ஒன்றே கேட்டிடுவோம் தாயே – யாம்
ஓர் சாவான் பாவந்தானும்
என்றேனும் செய்திடாமற் காத்து -எம்மை
சுத்தர்களாய் பேணும்